சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது.

சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி  நதிக்கரையில் குருத்வாரா அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையிலும், இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ளவும் இந்த வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம்  9 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க திட்டமிட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முகம்மது குரோஷி, கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த விழாவிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம். அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்றார். அதே நேரத்தில் இந்திய பிரதமர் மோடியை அழைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.