பாகிஸ்தான் வான்வழி வழியாக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் பயணிக்க, அந்நாடு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான மாநாடு வரும் 13ம் தேதி துவங்க உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வழி வழியாக பயணிக்க அனுமதி அளிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்திருந்தது.

 

இந்த கோரிக்கையை, பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டதாகவும், முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வர வேண்டும் என்று அந்நாடு தொடர்ந்து கோரி வருகிறது. தங்கள் நாட்டின் வான்வழியில் மோடி செல்லும் விமானம் பயணிக்க அனுமதி அளிப்பதன் மூலம், அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வரும் என்று நம்புவதாகவும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். 

பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீது குண்டுவீசி இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டின் வான்வழி வழியாக இந்திய விமானங்கள் பயணிக்க பாகிஸ்தான் தடை விதித்தது.