விடுதலை புலிகள் இயக்கம்தான் உலகில் முதன் முதலில் தற்கொலைப் படைத்தாக்குதலை அறிமுகம் செய்தவர்கள் என்றும், விடுதலை புலிகளை ஒரு தீவிரவாத இயக்கம் என்றும், நடந்து முடிந்த ஐநா மன்றுத்தில் பாகிஸ்தான் பிரதமர் பேசியிருந்தார். அந்த பிரச்சனையை தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள் கண்டித்து விஷயம் ஒய்ந்துவிட்ட நிலையில் தமிழ் தேசிய அரசியல் பேசும் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டித்துள்ளார் அதில்,

 

ஐ.நா. பேரவையில் உரை நிகழ்த்திய பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கம் இந்து பயங்கரவாத அமைப்பு என கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சாதி, மத வேறுபாடின்றி ஈழத் தமிழர்கள் அனைவருக்காகவும் போராடும் இயக்கம்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கமாகும்.

சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்து ஈழத் தமிழினப் படுகொலைக்கு துணை நின்ற ஒரு நாட்டின் தலைமையமைச்சர் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவும், அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும் போராடும் இயக்கத்தை ஆழமான உள்நோக்கத்துடன் அவதூறு செய்திருக்கிறார். சிங்கள இனவெறி அரசுக்குத் தொடர்ந்து அனைத்து வகையிலும் துணை நிற்கும் பாகிஸ்தானின் உள்நோக்கத்தை இந்திய அரசும், உலக நாடுகளும் உணர்ந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.