திரெளபதி படத்தை ஒரு தரப்பினர் கொண்டாடி வரும் நிலையில் கன்னி மாடம் படத்தைப்பற்றி மற்றொரு தரப்பு பெருமை பட்டு வருகிறது. 

திரெளபதி படம் நாடகக் காதலை தோலுரிப்பதாக கொண்டாடி வருகின்றனர். போஸ் வெங்கட் இயக்கிய கன்னிமாடம் திரைப்படம் ஆணவக்கொலைகள் குறித்து பேசுவதாக மற்றொரு தரப்பினர் பெருமை பேசி வருகின்றனர். இந்த இரு படங்களுமே ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. 

நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக உருவெடுத்திருக்கும் திரைப்படம் கன்னிமாடம். இப்படத்தில், ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி ஆகிய இருவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளானர். சாண்டில்யனால் எழுதப்பட்ட கன்னி மாடம் என்ற நாவலைத் தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சாதி ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பார்த்து, படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் பார்த்து, பாராட்டினார். இந்நிலையில், தற்போது கன்னிமாடம் திரைப்படம் குறித்து இயக்குநர் ப.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “கன்னிமாடம் திரைப்படம் இயல்பான திரையோட்டத்தில்,  சமரசமில்லாமல் ஆணவக்கொலைகள் குறித்து,  தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் போஸ்வெங்கட் அவர்களுக்கும் அத்திரைப்பட குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.