சீன துருப்புக்கள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கின, தற்போது அவர்கள் இருக்கும் இடத்தையும் யாராவது நமக்குச் சொல்வார்களா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். இந்நிலையில் இந்திய - சீன அரசுகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. அதேபோல இந்திய ராணுவமும் பின்வாங்கியுள்ளது. ஆனால், ஆயுதங்களுடன் கூடிய வாகனங்களை சீனா எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது.இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீன அரசு பின்வாங்கியுள்ளதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

 
அதே வேளையில் மத்திய அரசுக்கு சில கேள்விகளையும் ப.சிதம்பரம் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “எல்லையில் சீனப்படைகள் பின்வாங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன். சீன துருப்புக்கள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கின, தற்போது அவர்கள் இருக்கும் இடத்தையும் யாராவது நமக்குச் சொல்வார்களா? இதேபோல் இந்திய துருப்புக்கள் எந்த இடத்தில் இருந்து பின் வாங்கியது? எந்தவொரு துருப்புக்களும் (சீன அல்லது இந்தியா) LAC-யின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா?


இந்த கேள்விகளுக்கான பதில்கள் அவசியம், ஏனென்றால் ஜூன் 15-ல் என்ன நடந்தது, என்பதை அறிய இந்திய மக்கள் புதையல் வேட்டையில் உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.