காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மீதான நடவடிக்கை விவகாரத்தில், ஜனநாயகத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைப்பது மோசமான அருவருப்பான செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது முதலே காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாக அரசியல் கட்சித் தலைவா்கள் கடந்த 6 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், “உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு எதிராக கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைப்பது மோசமான அருவருப்பான செயல். அநியாயமான சட்டங்களை அமல்படுத்தும்போது, அதை அமைதியாக எதிர்ப்பதைத்தவிர மக்களால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவருடைய ட்விட்டர் பதிவில், “போராட்டங்கள் எல்லாமே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு இட்டுச் செல்லும். நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால், எம்.பி.க்கள் அதற்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசுகிறார். மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உணர்ச்சிமிகு உதாரண மனிதர்களையும், அவர்களுடைய வரலாற்றையும் பிரதமர் மறந்துவிட்டார். அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும். இதுதான் சத்தியாகிரகப் போராட்டம்” எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.