குமரி மேற்கு மாவட்டத்தில் ஆறுகாணி, சிற்றார், பத்துகாணி உள்பட மலையோரக் கிராமங்கள் உள்ளனர். இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். சில நேரங்களில் காட்டு விலங்குகள் ரப்பர் தோட்டங்களில் புகுந்து தொழிலாளர்களைத் தாக்கும் சம்பவங்களும் நடைபெறுவது உண்டு.

அருமனை அருகே சிற்றார் அரசு ரப்பர் தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் ரப்பர் பால் வடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ரப்பர் தோட்டத்தில் புகுந்த காட்டெருமை ஒன்று தொழிலாளர்களை தலையால் முட்டி வீசி தாக்கியது. 

இந்தப் பயங்கரத் தாக்குதலில் சிற்றார் சிலோன் காலனியைச் சேர்ந்த சந்திரா (44), தமிழ்செல்வன் படுகாயம் அடைந்தனர். சகதொழிலாளர்கள் அவர்களை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்குப்பின் மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 26ம் தேதி சந்திரா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அரசு ஆஸ்பத்திரியில் சந்திராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும்  சிகிச்சைப்பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வனவிலங்குகளால் தொடர் பாதிப்புகள் நிகழ்ந்து வருவதால் ரப்பர் தோட்ட பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பணியில் ஈடுபட்டிருக்கும்போது தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.