நாட்டு மக்கள் தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நமது விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்கள் தடுப்பூசிகள் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என உறுதியாக நம்பிய பிறகே அது மக்களின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். நாடு முழுவதும் சுமார் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும், மற்றொரு நிறுவனத்தில் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது.  முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் என  சுமார்3 கோடி  பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அது பிறகு படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது  உரையாற்றிய அவர், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போது இது மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் குறுகிய காலத்தில் ஒன்றல்ல இரண்டு மேட்-இன்-இந்தியா தடுப்பூசிகள் தயாராகியிருக்கிறது. மத்த தடுப்பூசிகளுக்கான பணிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. கொரோனா தடுப்பூசிகள் இரண்டுமே மிகவும் முக்கியமானவை என்பதை நாட்டு மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையில் ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் மாஸ்க் இல்லாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்துவிடக்கூடாது.  

இரண்டாவது டோஸ்க்கு பிறகுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இப்போது முதல் கட்டத்திலேயே மூன்று கோடிப் பேருக்கு இந்தியா தடுப்பூசி போடுகிறது.  இரண்டாவது கட்டத்தில் இதன் எண்ணிக்கை 30 கோடியாக உயர்த்தப்படும். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசி களுக்கு எந்த வகையிலும் நம் தடுப்பூசிகள்  தரத்தில் குறைந்தவை அல்ல. தடுப்பூசி கண்டுபிடிக்க இரவுபகல் உழைத்த விஞ்ஞானிகளுக்கு நம் பாராட்டுக்களையும் புகழ் வணக்கத்தையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை என்பது நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை. நம் விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்கள் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்பதை உறுதி செய்த பின்னரே, அதில் திடமான நம்பிக்கை ஏற்பட்ட பிறகே, இது மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகளிலிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.