வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும், அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும்கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் கூற்று. 

அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம். திமுகவை பொறுத்தவரையில், வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பரிபக்குவம் பெற்றவர்கள் நாம். வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம்! இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும், இரவு பகல் பாராது உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தோழர்கள் - அனைவருக்கும், தி.மு.க. தலைவர் என்ற அடிப்படையில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உழைப்பு வீண்போகவில்லை; வீண்போகாது.

அடுத்தடுத்த தேர்தல் களத்துக்கும் சேர்த்து நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். எப்போதுமே தேர்தலுக்காகப் பணியாற்றுவது என்பது, தேர்தல் பணி மட்டுமல்ல, அஃது இயக்கப் பணியும் இணைந்ததுதான். கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றினோம் என்ற உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று, நிறைவு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே காலகட்டத்தில் - மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடந்துள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி பெற முடியாமல் போனாலும், மரியாதைக்குரிய எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது என்பது, உள்ளபடியே பாராட்டத்தக்கதாகும். அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற காமராஜர் நகர் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய இரு மாநில தேர்தல்களை பொறுத்தவரையில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றது என்பது, அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஊக்கம் பெற இது வழிவகுக்கும். கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.