other states students writing tnpsc exams
தமிழ்நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகளே வேலையில்லாமல் தவித்துவரும் நிலையில், வெளிமாநிலத்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வாய்ப்பளிப்பது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு பணிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வுகளில் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளிமாநிலத்தவரும் கலந்துகொள்ளும் நிலை உள்ளது. இதனால், தமிழ்நாட்டு மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்ற ஆதங்கம் தமிழக பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களிடையே உள்ளது.
பொறியியல், எம்பிஏ, எம்.பில் படித்தவர்கள் கூட துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த குரூப் 4 தேர்வினை மத்திய பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10,000 காலி பணியிடங்களுக்காக நேற்று நடந்த குரூப் 4 தேர்வினை எழுத 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அந்தளவுக்கு வேலையின் தேவை தமிழக இளைஞர்களுக்கு உள்ளது. விண்ணப்பித்திருந்த 20 லட்சம் பேரில் வெளிமாநிலத்தவரும் அடங்குவர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அரசு உதவி பெறும் பள்ளியும் ஒரு தேர்வு மையம். அங்கு மத்திய பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை பூர்வீகமாக கொண்ட இரண்டு இளைஞர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் எழுத படிக்கவே தெரியாத இவர்கள், ஆங்கில வழியில் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியில் தமிழக மாணவர்களையே நியமிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதற்கு ஏதுவாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
