OPS wil win

ஆட்சியும், கட்சியும் விரைவில் ஓபிஎஸ் கைகளில் வரும்… முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி…

ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக, ஒரு குடும்பத்தின் கைகளில் போய்விடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் தலைமையில் தர்மயுத்தம் நடைபெற்று வருவதாகவும், அது வெல்லும் என்றும், விரைவில் ஆட்சியும், கட்சியும் ஓபிஎஸ் கைகளில் வரும் என்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபடத் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலராக, சசிகலா நியமனம் செய்யப்பட்டது, சட்டப்படி செல்லாது என, தேர்தல் கமிஷனிடம், மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் கமிஷன் இப்பிரச்சனையில் நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அதன்பின்னர் மக்கள் மன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சேலத்தில், முதல் கூட்டமும், பின்னர் ,மண்டல வாரியாக, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்ன் சுற்றுப்பயண விபரம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..

அதிமுக ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே, தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளோம், பொதுக்குழு உறுப்பினர்களில், பெரும்பாலானோர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் பாண்டியராஜன் கூறினார்.


தற்போதுள்ள அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம், எங்களுக்கு கிடையாது. குடும்ப ஆதிக்கம் ஒழிந்து, ஓபிஎஸ் முதலமைச்சராக வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக ஒரே இயக்கமாக இருக்க வேண்டும்; இதில், பிரிவினை வந்து விடக்கூடாது என தெரிவித்த பாண்டியராஜன், விரைவில் கட்சியும், ஆட்சியும் ஓபிஎஸ் கைக்கு வரும் என்றார்.