அதிமுகவுக்கு வலிமையான ஒற்றை தலைமை தேவை. இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஓ.பிஎஸ் - எடப்பாடி என இரு தலைமையையும் விமர்சித்துள்ளார் மதுரை வடக்கு மாவட்ட தொகுதி ராஜன் செல்லப்பா. 

அதேவேளை ஆளுமைமிக்க தலைமையை உருவாக்க வேண்டும். செயற்குழு, மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்க வேண்டும். ஜெயலலிதாவால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டவர்தான், தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். இப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. 

அல்லது இதைவிட சிறப்பானவர்கள், இருந்தாலும் அவர்களை பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் இந்த ராஜன் செல்லப்பா. அப்படியானால் இரட்டை தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும் என மறைமுகமாக கூறுகிறாரா? அப்படிப்பார்த்தால் இவர்கள் இருவரை விட சிறப்பானவரை தேந்தெடுக்க வேண்டும் என கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையையும் அதிமுகவில் ஒரு தரப்பைனர் ஏற்கவில்லை என்றே கருதப்படுகிறது. 

அப்படியானால் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர் தான் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என ராஜன் செல்லப்பா சுட்டிக் காட்டுவது யாரை..? சசிகலாவை தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என சுட்டிக் காட்டியே ஓ.பி.,எஸ் - எடப்பாடி தலைமைக்கு எதிராக ராஜன் செல்லப்பா மூலம் சிலர் குரல் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஓ.பன்னீர்டெல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களது சுயநலத்துக்காக மட்டுமே கட்சியை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் மோதல் காரணமாகவே அதிமுக இந்தத் தேர்தலில் தோல்வியை தழுவியது. இப்படியே போனால் அவர்களுக்குள் எழுந்து வரும் அதிகார மோதலால் அதிமுகவுக்கு அழிவு நிச்சயம். 

ஆகையால், சசிகலாவிடம் அதிமுகவை ஒப்படைத்து விடலாம் என கட்சிக்குள் பல அமைச்சர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக செல்லூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் என பல அமைச்சர்களும் சசிகலா தலைமையை ஏற்கத் தயாராகி விட்டனர். எதிர்காலத்தை உணர்ந்து கொண்ட எடப்பாடி பழனிசாமியும் இதற்கு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா அதிமுக தலைவராக இவர்கள் தரப்பில் இருந்து வைக்கப்படும் ஒரே கோரிக்கை டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமே. 

அதற்கும் சசிகலா சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இளவரசி மகன் விவேக் ஜெயராமனும் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனும் இப்போதும் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி மனைவியும் சசிகலாவை சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி இந்த ஆட்சியை முழுமையாகத் தொடரலாம். அடுத்து ஆட்சி அதிகாரத்திற்கு சசிகலாவை நியமிக்கலாம். அவர் தான் அம்மா காட்டிய அடையாளம். அனைவரையும் அரவணைத்து செல்பவர் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள். அதன் முதல் படிதான் ராஜன் செல்லப்பாவின் இந்தக் குரல் என்கிறார்கள்.

 

எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொண்டார் எனக்கூறப்படும் அதேவேளை சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் நிலை என்ன வென்று விசாரித்தால், அவரை அதிமுகவில் இருந்தே விலக்கி வைக்க வேண்டும். அவரால் தான் அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் இந்த நிலை ஏற்பட்டது. ஆகையால் அவரை ஒதுக்கி வைத்து விட்டு கட்சியை நடத்துவதுதான் நல்லது’’ என சசிகலா தகவல் அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் டி.டி.வி.தினகரன் - ஓ.பி.எஸை ஒதுக்கி வைத்து விட்டு எடப்பாடியை துணைக்கு அழைத்துக் கொண்டு அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க உள்ளதாக அடித்துக் கூறுகிறது அதிமுக வட்டாரம்.