ops teams are irritate eps team at theni MGR Meeting
பன்னீரும், எடப்பாடியும் தாமரை இலை தண்ணீர் பந்தத்தில்தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இரண்டு அணிக்கும் இடையில் இதயப்பூர்வமான இணைப்பு நிகழவில்லை, கிடைக்கும் இடத்திலெல்லாம் ஒரு அணி மற்றொரு அணியை காலை வாரி காலி செய்கிறது, குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பன்னீரை பழனி அணி புறந்தள்ள, தெற்கிலோ பன்னீர் அணி பழனிசாமியை பழியெடுக்கிறது...என்றெல்லாம் விமர்சனங்கள் இருக்கின்றன.
ஆனால் இதை இரு அணிகளுமே பெரிதாக மறுத்ததுமில்லை, கண்டுகொள்ளாமல் விட்டதுமில்லை.
இந்நிலையில் இன்று தேனி மாவட்டத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக துவக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்களில் இந்த பிளவு வெளிப்படையாக பளீரிட்டது. ஆளும் அ.தி.மு.க. அணியை பொறுத்த வரையில் தேனி மாவட்டமென்பது பன்னீரின் கோட்டை.
அங்கே அவரது ஆதரவாளர்கள் இந்த விழாவுக்காக வைத்திருக்கும் பிளக்ஸில் முதலில் பன்னீர்செல்வத்தின் பெயரை பெரிய எழுத்துக்களில் போட்டு அதன் கீழே ‘கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர், தமிழ்நாடு முதலமைச்சர்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதன் கீழே எடப்பாடி பழனிசாமியின் பெயரைப் போட்டு ‘கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பிளக்ஸை வம்படியாகவே பன்னீரின் டீம் வைத்துள்ளது என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறது. இந்த பிளக்ஸ் வைக்கப்பட்ட மாத்திரத்திலேயே உளவுத்துறையின் மூலம் முதல்வரின் காதுகளுக்கு தகவல் போய்விட்டது. ஆனாலும் பிரச்னை வேண்டாமென்று அடக்கி வாசித்துவிட்டார்.
அதேபோல் இப்படியொரு போர்டை தனது ஆட்கள் வைத்திருக்கிறார்கள் என்று பன்னீர் தரப்பின் காதுகளுக்கும் போய்விட்டன. ஆனாலும் அவர்கள் அதை எடுக்கச்சொல்லியோ, திருத்தச்சொல்லியோ எந்த ஆர்டரும் போடவில்லை என்கிறார்கள்.
இந்த விவகாரமே பன்னீர் அணி மற்றும் எடப்பாடி அணிகளுக்கு இடையில் உள்ள விரிசல் பஞ்சாயத்தை விரிவாக விளக்குகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதற்கு பழிக்குப் பழியாக கொங்கு மண்டலத்தில் அடுத்து நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பன்னீரின் பெயர் இருட்டடிப்போ அல்லது தகுதி குறைப்போ செய்யப்படுமென்பது எதிர்ப்பார்ப்பு.
ஆக இப்படி உட்கட்சி விரிசல்கள் தேனீயாய் கொட்டக் கொட்ட நடந்து கொண்டிருக்கிறது தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா.
இது போதாதென்று இன்று அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ‘கனமழை காரணமாக’ என்று சொல்லி விடுமுறை அளித்துள்ளார்களாம். முழுக்க முழுக்க இந்த விழாவுக்காகத்தான் இந்த ஏற்பாடாம்.
’யார் நம்மை கேட்பது?’ எனும் தொனியிலான இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
