ஓ.பி.எஸ். பையன் ஓஹோன்னு தோக்கணும்! தினகரனை போற்றியதால் வாழ்ந்த பன்னீர், அவரை தூற்றியதால் வீழணும்!: தாறுமாறாக களமிறங்கிய தங்கதமிழ் செல்வன், தோள்கொடுக்க தி.மு.க.வும் ரெடியாம். 

’ஜெயிக்குறோமோ இல்லையோ! முதல்ல சண்டை செய்யணும்’...தனுஷின் ‘வடசென்னை’ படத்தின் இந்த ஹாட் டயலாக் தான் டி.டி.வி. தினகரன் டீமின் டேக் லைன். ஒரு விஷயம் நடக்குதோ இல்லையோ ஆனால் அதையெல்லாம் பற்றிக் கவலையேபடாமல் ’என்னாகுதுன்னு மட்டும் பாருங்க. இதை அப்படியே தலைகீழா புரட்டிப் போடுறோம்!’ என்று ஏகத்துக்கும் சவால்விட்டு, எதிராளியை தேம்பி திகைக்க வைப்பதையே ஸ்டைலாக கொண்டுள்ளனர். இந்த பயத்தில் சிதறியே எதிராளியின் பர்ஃபார்மென்ஸ் பாதி குறைய, உடனே ஏகத்துக்கும் இறங்கியடிப்பது டி.டி.வி.யின் ஸ்டைல். 

‘பிரதமரை தேர்ந்தெடுக்கும் முகாம்களில் நாங்களும் முக்கிய முகமாக இருப்போம்!’ என்று ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அலறவிட்ட தினகரன் இப்போது தேனியில் நிறுத்தியிருக்கும் வேட்பாளர் மூலமாக ஓ.பி.எஸ்.ஸுக்கு ஓவர் எனிமா கொடுத்துவிட்டார்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஒருகாலத்தில் தி.மு.க.வின் வாரிசு அரசியல் முறையை வாய் வலிக்க பேசிய பன்னீர் இப்போது தன் மகனை வேட்பாளராக்கியிருப்பதன் மூலம் உட்கட்சிக்குள்ளேயே மிக மோசமான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். 

ஆனாலும் அந்த விமர்சனங்களை தூக்கி அக்கட கிடாசிவிட்டு, ரவியின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிவிட்டார். 
அ.தி.மு.க.வை பார்க்கும் இடங்களில் எல்லாம் விரட்டி விரட்டி வம்பிழுக்கும் தினகரன், தேனியில் மட்டும் கொட்டாமல் விடுவாரா என்ன? தன் பிரசார பீரங்கியான தங்கதமிழ் செல்வனை இந்த தொகுதியில் எதிர்த்து இறக்கியிருக்கிறார் தினகரன். இதை பன்னீர் அணி எதிர்பார்க்கவேயில்லை! என்கிறார்கள். காரணம், தினகரனுக்கு இருக்கும் ஆதரவு அலையில் மிக முக்கிய சதவீதம் தங்கத்துக்கும் தமிழக முழுக்க இருக்கிறது. ’எடப்பாடி, பன்னீர் கோஷ்டியின் கண்ணில் விரலை விட்டும் ஆட்டும் கில்லி மனுஷன்!’ என்று தங்கத்துக்கு கழகங்கள் தாண்டி ஒரு பெரிய வரவேற்பு இருக்கிறது. 

அப்பேர்ப்பட்ட தங்கம் தேனியில் களமிறங்கியிருக்க, தகவல் அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்தே அந்த தொகுதியில் பெரும் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. பிரசாரத்தை துவக்கிவிட்ட பன்னீர் அணிக்கு இருக்கும் வரவேற்பை விட, இன்னும் களமாட துவங்காத தினகரன் அணிக்கு பெரும் வரவேற்பு தென்பட துவங்கிவிட்டது! என்று அரசியல் பார்வையாளர்கள் அடித்துச் சொல்கின்றனர். 

ஏதோ 40 தொகுதியிலும் இந்த தேனி தொகுதியே மிக பிரதான தொகுதி என்று  முடிவு செய்து கொண்டு படைதிரட்டி பிரசாரத்தில் கலக்க தினகரனும் முடிவெடுத்துவிட்டார். ‘களத்தில் வேற எதையும் நாம பேச வேணம், தினகரனுக்கு ஓ.பி.எஸ். செய்த துரோகத்தை பேசுவோம். பா.ம.க.வோடு கூட்டு வைத்து அம்மாவுக்கு பன்னீரும், எடப்பாடியும் செய்த துரோகத்தை வீதி வீதியாய் கிழிப்போம். நம்புறாங்களோ இல்லையோ, வார்த்தைக்கு வார்த்தை பன்னீர்செல்வத்தை தாக்கியெடுப்போம். அவரால பல ஏரியாக்களில் நுழைய கூட முடியாதபடி எதிர்ப்பு அலையை உருவாக்கணும். ரவிக்கு தேர்தல் முடியுற வரைக்கும் தூக்கமே வரக்கூடாது. 

அண்ணன் தினகரனால் அரசியல் வாழ்க்கை பெற்று முதல்வர் நிலைக்கு உயர்ந்த பன்னீர்செல்வம் அதை  கடைசி வரைக்கும் மனதில் வெச்சு நன்றியா இருந்திருக்கணும். ஆனால், துரோகம் பண்ணிட்டார். அந்த வலி, வேதனையை அவர் உணரணும். ஓஹோன்னு தோக்கணும் ஓ.பி.எஸ்.” என்று தீர்மாணமே போட்டு வேலையை துவக்கியுள்ளனர். 

சும்மாவே ஆடும் தங்கதமிழ் செல்வனுக்கு சீட் கொடுத்து காலில் சலங்கை கட்டிவிட்டார்கள், விடுவாரா அவர்? 
இந்த அதிரடிகளால் அரண்டு கிடக்கும் அ.தி.மு.க.வுக்கு பேரதிர்ச்சியாக, தி.மு.க.வின் கணிசமான டீம் ஒன்று அ.ம.மு.க.வை ஆதரிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறதாம். காங்கிரஸ் இந்த தொகுதியில் நிற்பதால் வெறுத்தவர்களின் நிலைப்பாடாம் இது. முழுக்க முழுக்க சாதி அடிப்படையில் இப்படி தி.மு.க.வினரை வளைத்துள்ளதாம் அ.ம.மு.க. டீம். 
ஆக! தேனி தெறிக்கவிடும் போலிருக்குதே!