சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என குரல் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக வாக்குகள் சிதறாமல் இருக்க அதிமுக- அமமுக இணைக்க வேண்டும் என தொண்டர்களின் ஒரு பிரிவினர் இடையே குரல் எழுந்துள்ளது. தேனி மாவட்ட அதிமுக சார்பாக சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக அதிமுகவினர் குரல் எழுப்பாமல் அமைதியாகினர். 

இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி அதிமுக மகளிர் அணி சார்பாக சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுக தலைமையகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் தின கொண்டாட்டத்திற்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் உள்ள அறையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும், சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.

முன்னதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிமுக தலைமையகம் வந்த போது அதிமுக வட சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம் தலைமையில் வந்த அதிமுகவினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி கொண்டிருந்தனர். . எடப்பாடி பழனிசாமி வாழ்கவென்றும், சசிகலா ஒழிகவென்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே தேனி மாவட்ட நிர்வாகிகள் சசிகலா இணைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் தலைமையில் சசிகலாவிற்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளதாகவும் அந்த கூட்டத்தில் சசிகலா இணைப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது