நாளை ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மிகவும் நிகழ்ச்சியை விமர்சையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நாளை ஓ.பி.எஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் சசிகலா தரப்பும் ஓ.பி.எஸ் தரப்பும் தனித்தனியாக ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட உள்ளது.

சசிகலா தரப்பு ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்திலும் ஓ.பி.எஸ் தரப்பு ஜெயலலிதா நின்று வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியிலும் கொண்டாட உள்ளனர்.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

மேலும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அண்ணன் எப்போதுமே அதிமுக குடும்பத்தில் ஒருத்தர்தான் எனவும் அவரே கட்சியை ஏற்று நடத்தட்டும் எனவும் தீபக் கூறியுள்ளார்.

தனது அத்தையான ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை எனவும் போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம். சசிகலா குடும்பத்திற்கும் அத்தை ஜெயலலிதாவிற்கும் எவ்வித ரத்த சம்பந்தமும் இல்லை என அடுத்தடுத்து பல குண்டுகளை தூக்கி வீசினார்.

அதிமுகவிற்கு தலைமையேற்க டி.டி.வி தினகரனுக்கு தகுதி இல்லை எனவும், ஓ.பி.எஸ் அண்ணன் அவர்களுக்கே மூன்று பங்கு தகுதி உண்டு எனவும் தீபக் ஓ.பி.எஸ்க்கு பச்சை கொடி காட்டினார்.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் பாண்டியராஜன் நாளை ஓ.பி.எஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார், அது வரலாற்றை திருப்பி போடும் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இந்த சூழ்நிலையில், ஓ.பி.எஸ் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை வெளியிடுவார், இல்லை கட்சியை பற்றி கூறுவார். இல்லை ஆட்சியை பற்றி கூறுவார், முந்தைய ரகசியங்கள் ஏதாவது காத்திருக்குமா? என பொதுமக்கள் மூளையில் பல்வேறு கேள்விகள் அலைமோதுகின்றன.

நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்...