தென்னிந்தியாவில் பிரபலங்கள் பங்கேற்கும் இந்தியா டுடே ஊடக மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்தியா டுடே சார்பில் நடத்தப்படும் இந்த மாநாடு பத்திரிகை துறையில் பிரபலமானது. இந்த ஆண்டு சென்னையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் பிமுகர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதவிர, சினிமா பிரபலங்கள், நடிகர் கமலஹாசன், நடிகைகள் ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக இந்த மாநாட்டை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர் ஜெயலலிதா தொடர்பாக கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து  கருத்ரங்கில் பேசிய முதலமைச்சர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் பல்வேறு தொலை நோக்குத் திட்டங்களால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவில் வேகமாக  பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் மாநிலங்களில் தமிழகம் 2 ஆவது இடத்தை பெற்றுள்ளதாகவும், புதுப்பிக்கத்தக்க மின்சாரம். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் தமிழகம் அளப்பரிய முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் ஓபிஎஸ் கூறினார்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் சிறந்து விளங்கும் தமிழகம் தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.