இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நேற்று 72 பேருக்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் சுகாதரத்துறையினர் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவுகள், மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் என்பதால் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றால் விலை மதிக்க முடியாத மனித உயிா்கள் பறி போய் விடக் கூடாது என்பதை உணா்ந்து அரசு இயந்திரங்கள் முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.உயிரைக் கொல்லும் கொடிய கொரோனா நோயை நாம் முற்றிலும் அழிப்பதற்கு அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழக அரசின் ஊரடங்கு கால உத்தரவுகள், நம் உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான்.தமிழகத்தில் யாா் ஒருவா் உயிா் இழந்தாலும் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. கொரோனா பரவாமல் தடுத்திட வேண்டும். இதற்காகவே தமிழக அரசு அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றை வெற்றி கொள்ள நாம் நடத்தும் போரில் அரசுக்கு பக்க பலமாக தமிழக மக்கள் இருக்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியிருக்கிறார்.