ops pressmeet about admk ministers mps

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். தற்போதும் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து பேசி வருவது சசிகலா அணியினரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் வெப்பத்தைக் காட்டிலும் ஆர்.கே.நகர் தேர்தல் ஜூரம் தான் அதிக அளவில் அடித்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அங்கிருந்தவாரே அரசியல் நிகழ்வுகளையும், நகர்வுகளையும் கண்காணித்து வருகிறார். 

இதற்கிடையே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ். நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், "அதிமுகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை...இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.

இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். தற்போதும் சசிகலா அணியில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்."

"கட்சியின் பொதுச் செயலாளரை சட்டமன்ற உறுப்பினர்களோ, பொதுக்குழுவில் இருக்கும் உறுப்பினர்களோ தேர்ந்தெடுக்க முடியாது.அதிமுகவில் உறுப்பினராக இருக்கும் அடித்தட்டு தொண்டன் தான் தேர்ந்தெடுக்க முடியும்.

எம்.ஜி.ஆர். வகுத்த சட்ட விதிப்படி தேர்வு செய்யப்படாத சசிகலா, பொதுச் செயலாளர் பதவியில் தொடர்வது செல்லாது என்று நாங்கள் வாதிட்டுக் கொண்டு இருக்கிறோம்."

"மேலும் சசிகலாவால் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளை நீக்கவோ, புதிய நிர்வாகிகளை நியமிக்கவோ அதிகாரம் இல்லை. ஜெயலலிதாவால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை துணைப் பொதுச் செயலாளராக அறிவித்து ஆர்.கே.நகரில் போட்டியிடுவது அ.தி.மு.க. கட்சி சட்டத்துக்கு எதிரானது." இவ்வாறு அவர் கூறினார்.