OPs Press meet in chennai about barathiyar University VC
தமிழக அரசில் பணிபுரியும் போதோ அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களோ தங்களது பணிக்காலத்தில் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் எச்சரித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக சுரேஷ், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய ஒரு லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் 29 லட்சத்திற்கு காசோலையும் கொடுத்து துணைவேந்தரிடம் சுரேஷை கொடுக்க சொல்லியுள்ளனர்.

அதன்படி, சுரேஷிடம் இருந்து துணைவேந்தர் கணபதி இன்று அலுவலகத்தில் வைத்து லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக அரசில் பணிபுரியும் போதோ அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களோ தங்களது பணிக்காலத்தில் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
