ops order to team leaders

சென்னையிலேயே தங்கி இருந்தால், சுற்று பயணத்தின் போது, போது கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களை கொண்டு வந்து சேர்க்க முடியாது என்பதால், அனைவரும் சொந்த ஊருக்கு சென்று கட்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று தமது அணியில் உள்ளவர்கள் அனைவருக்கு பன்னீர்செல்வம் உத்தரவு போட்டுள்ளார். 

அதிமுகவில் அணிகள் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்த பன்னீர், தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

அவருக்கு போட்டியாக, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்த அறிவிப்பு வெளியிட்டு, முதல்வர் எடப்பாடியும், தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 5 ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட, பன்னீர் அணியின் பொது கூட்டம், கொட்டிவாக்கத்தில் நடத்தப்பட்டது. அதில் பன்னீருடன் அணியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.

அதே, நாளில் மதுரையில் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் முதல்வர் எடப்பாடி. அமைச்சர் உதயகுமார் போன்றவர்கள் முன்னின்று ஏற்பாடுகளை கவனித்தனர். 

மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டது. எனினும் பெரிய அளவில் கூட்டம் வரவில்லை. விழாவில் எண்ணற்ற நாற்காலிகள் காலியாக கிடந்ததால், அப்செட் ஆனார் முதல்வர்.

மறுபக்கம், கொட்டிவாக்கத்தில் பன்னீர் அணியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனினும், அதில் திருப்தி அடையாத பன்னீர் அந்த கூட்டம் போதாது என்று கூறி உள்ளார். 

அதனால், சென்னையில் தினமும், அவரது வீட்டிற்கு வரும் முக்கிய தலைவர்கள் அனைவரையும், அவரவர் சொந்த ஊருக்கு சென்று, அங்கு நடைபெறும் கூட்டத்தில், தொண்டர்களும், மக்களும் திரளாக கலந்து கொள்வதற்கான முன்னேற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வகையில், முதலில் சேலத்திற்கு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் விறு விறுப்பாக தொடங்கி விட்டார் முன்னாள் அமைச்சர் செம்மலை. 

அதேபோல், கே.பி.முனுசாமியும் கிருஷ்ணகிரி சென்று, பொது கூட்ட வேலைகளை மும்மரமாக கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும், சுற்று பயணம் முடியும் வரை, சென்னையில் உள்ள தமது வீட்டுக்கு யாரும் வரவேண்டாம் என்றும் பன்னீர் கூறி விட்டதால், அவரது வீடு வெறிச்சோடி கிடக்கிறது.

தற்போது, மாபா பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் மட்டுமே, சென்னையில் இருந்து தினமும் பன்னீரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

எனவே, பன்னீர் இனி கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம், திரளாக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.