முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், நேற்று இரவு, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று, ஒரு மணிநேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் அதிமுக பொது செயலாளர் சசிகலா மீது பரபரப்பு புகார் தெரிவித்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பல அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஒ.பி.எஸ். நீக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்எல்ஏ செம்மலை, ஓ.பி.எஸ்.ஜுக்கு பொறுமை இல்லை என போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். எம்எல்ஏ செம்மலை, கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அரசியலை கற்றவர் சசிகலா. ஜெயலலிதாவை போலவே, சசிகலாவும் அதிமுகவை கட்டுக்கோப்பாக நடத்துவார். ஜெயலலிதா சொன்னதால், கீழ் பதவியில் இருந்த ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வராக ஏற்றுக்கொண்டோம்.

கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு இருக்கும் பொறுமை கீழ்படியில் உள்ள ஒ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர். இதனால் ஆளுநர் நிச்சயம் சசிகலாவை ஆட்சி அமைக்க முன் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
