முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பில் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

அணிகள் இணைப்புக்கான இறுதி சுற்றுக்கு முன்பு, தேர்தல் ஆணையத்தில் மேலும் புதிய ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் அணி சில நாட்களுக்கு முன்பு கொடுத்தது.

பிளவுபட்ட அதிமுக அணிகள் இணையுமா என்ற கேள்விக்கு கடந்த 7 மாதங்களாக விடை கிடைக்காத நிலை உள்ளது. அதிமுக அம்மா அணியை வழி நடத்தி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் சமீபத்தில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ததால் மோதல் மேலும் முற்றியுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க முயன்றார்.

ஆனால், பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்க தாமதமானதால், ஓ.பன்னீர்செல்வம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த சந்திப்பு நாளை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பின்போது, பிரிந்துள்ள அதிமுக அணிகளின் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.