ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஜெ., பற்றி தரம் இல்லாமல் பேசினால், நிச்சயம் பதிலடி தருவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’அ.தி.மு.க.,வுக்கு எதிராக பொய்யான கருத்துக்களை சொல்லி, தவறான கருத்துக்களை பரப்பும் நேரத்தில், என் அதிரடி பேச்சு நிச்சயமாக இருக்கும். அ.தி.மு.க.,வை யாரும் சீண்டினால், எங்கள் தலைவர்கள், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஜெ., பற்றி தரம் இல்லாமல் பேசினால், நிச்சயம் பதிலடி தருவேன்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.டாலின் பொய்யான வதந்திகளை, வார்த்தைகளை, அறிக்கைகளை பக்குவமாக சொல்லி விட்டு போயிருக்கிறார்; ஏமாற்ற தெரிந்த உத்தமர்.  கமல் நடிக்கின்ற போது, தன் வருமான வரிக்கணக்கை சரியாக காட்டியிருக்கிறாரா என்பதை, அவர் இதயத்தை தொட்டு மனசாட்சிப்படி பேச வேண்டும். மற்றவர்கள் மீது குறை சொல்வது ஈசி. தாம் நிறைவான அரசியல் வாழ்க்கை செய்திருக்கிறோமா என்று, அவர் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து கொள்வது அவசியம். அவர் சொல்வது அத்தனையும் உண்மைக்கு புறம்பானவை.

என் ஓட்டு விலைக்கு அல்ல என, வீட்டு வாசலில் எழுதி மாட்டி வையுங்கள் என, மக்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதை, அவரது வீட்டு வாசலிலும், கட்சி அலுவலகத்திலும், முதலில் மாட்டினால் நன்றாக இருக்கும்.

சிவகாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான் ராஜபாளையம் தொகுதிக்கு மாறியது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். சிவகாசியில் என் கூட இருக்கும் மற்றவருக்கு, என் கூட இருக்கும், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. ராஜபாளையத்தைச் சேர்ந்த சமூக பெரியோர்கள், கழக நிர்வாகிகள், அங்கு போட்டியிட வேண்டும் என, ஓராண்டு காலமாக என்னை வலியுறுத்தினர். அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, அங்கு போட்டியிடுகிறேன். நான் இரண்டு முறை வெற்றி பெற்ற தொகுதி, சிவகாசி.

நான் மஞ்சள் சட்டை அணிவது, சிறு வயதில் இருந்தே எனக்குள்ள பழக்கம். மஞ்சள் என்பது ஆன்மிகத்தின் அடையாளம். தெய்வத்தினுடைய வெளிப்பாடு மஞ்சள். அந்த அடிப்படையில், மஞ்சள் சட்டை அணிகிறேன். அதை யார் சொல்லியும் அணியவில்லை’’ என அவர் தெரிவித்தார்.