எம்ஜிஆர் குல்லா,கண்ணாடியோடு எடப்பாடி பழனிசாமி..! ஓ.பன்னீர் செல்வத்தின் ரியாக்ஷன் என்ன தெரியுமா..?
கர்நாடகாவில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து புகழேந்தி கடிதம் கொடுத்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் போட்டி
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருச்சியில் தங்கள் அணி சார்பாக ஏப்ரல் 24 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்த இருப்பதாக கூறினார். கட்சி நலன் கருதியே நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவின் மூலம் மக்கள் இபிஎஸ் அணியை ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக தெரிவித்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தங்கள் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த இருப்பதாக தெரிவித்தவர், எடியூரப்பாவை சந்தித்து புகழேந்தி கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
எம்ஜிஆராக இபிஎஸ்
எம்ஜிஆர் தோற்றத்தில் கண்ணாடியும் , குல்லாவும் அணிந்து எடப்பாடி பழனிசாமி எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மன வேதனை அடைந்துள்ளதாக கூறினார். சில நேரம் கட்சி பெயர் , சின்னம் யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்தே தேர்தல் நேரத்தில் மக்களிடம் முக்கியத்துவம் பெறும் என கூறினார்.அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கான நிரூபணம் நாங்கள் நடத்தும் மாநாட்டின் மூலம் தெரியவரும் என கூறினார் ஜெயலலிதாவின் முழு உருவ வெங்கலச்சிலையை மாவட்டம்தோறும் வைக்க வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் மன்றம் செல்லவுள்ளோம்
இதனை தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமசந்திரன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளது . ஈரோடு கிழக்கு தேர்தலில் எம்ஜிஆர் , ஜெயலலிதா படங்களை பயன்படுத்தியும் பணம் , படை பலத்தை பயன்படுத்தியும் மக்கள் அவர்களை ஏற்கவில்லை. எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் மாயை விலகிவிடும் என்று நம்புகிறோம். நாங்கள் இனி மக்கள் மன்றம் செல்ல உள்ளோம். இனி எடப்பாடி பழனிசாமி அணி குறித்து நாங்கள் விமர்சிக்கவோ , பேசவோ மாட்டோம் என கூறினார்.
இதையும் படியுங்கள்
விரைவில் ஏலத்திற்கு வரும் ஜெயலலிதா சொத்துகள்.. என்னென்ன தெரியுமா? கர்நாடகா அரசு எடுத்த அதிரடி முடிவு