அதிமுக கட்சியின் பல பரப்பரப்புக்கிடையே முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்  மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவிலில் சிறப்பு பூஜை  செய்தார். அவருடன் மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் விரைவில் இணைந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் எங்களது அணியே உண்மையான அ.தி.மு.க. என்று அறிவிக்க வேண்டும் என்று புதிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளார்.

இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த செயல் பா.ஜ.க. மேலிடத்திற்கு அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனாலேயே ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படு கிறது.

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் பேசியுள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறித்து தன்னுடைய அதிருப்தியை அவர் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் பிரதமரை சந்திபதற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் வழங்கப்படாததால் டெல்லியில் இருந்து ஷீரடி சென்றார் என தகவல்கள்  கிடைத்தன. 

இந்நிலையில் பிரதமரை சந்திக்கசென்று அவரது சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதால் அவர் மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் நெவாசா தாலுக்காவில் அமைந்திருக்கும் ஷனி ஷிங்கநபூரில் உள்ள சனி பகவான் கோவிலில் சிறப்பு பூஜையில் ஈடுப்பட்டுள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஷனி ஷிங்கநபூர் கிராமத்தில் இருக்கும் கோவில் சனி கிரகத்துடன் தொடர்புடைய கடவுளான சனியின் பிரபலமான கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.