அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 17 ம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தலில், அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. 

அத்துடன், பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்களின் அடிப்படையா, ஆர்கே நகர் தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையம், தினகரனை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா நியமன விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை நடைபெறுகிறது.

அதிமுக கட்சி விதிகளின் படி, பொதுக்குழு மட்டும் பொது செயலாளரை தேர்வு செய்ய முடியாது. கட்சி  உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தே தேர்வு செய்யவேண்டும். 

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலர் இல்லையெனில், முந்தைய பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே  கட்சியை வழிநடத்த முடியும். 

இதனடிப்படையில் சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி சசிகலாவின் நியமனமே செல்லாது என்று அறிவித்தால், தினகரனின் துணைப் பொதுச்செயலர் பதவியும் செல்லாததாகிவிடும். 

அதனால்,  தினகரனின் அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வந்துவிடும் என்று ஓ.பி.எஸ் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

அந்த அணியை சேர்ந்த  முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், அதையே  மறைமுகமாக கூறியுள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.