அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை வாக்காளர்கள் புறந்தள்ளியுள்ளனர் என்று தினகரனுக்கு இந்த தேர்தலில் ஏற்பட்ட நிலைமையை வெளிப்படையாக சொல்லி பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், “அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அதிமுகவின் சார்பில் நன்றி. பல கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அதிமுகவுக்கும் கூட்டணிகளுக்கும் வழங்கி இருக்கின்றனர். குறிப்பாக, 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்காளர்கள் அளித்த மகத்தான வெற்றியின் காரணமாகவே, ஜெயலலிதா அமைத்த நல்லரசு நிலை பெற்றிருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் அதிமுகவின் குரல் ஒலிப்பதை உறுதி செய்திடும் வகையில், தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்கள், “தேனி மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு அளித்திருக்கும் வெற்றி மாலை, அதிமுகவுக்கு சூட்டப்பட்ட நன்றி மாலையாக அமைந்து, மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசை ஆதரித்து வழிமொழியும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

தினகரன் தலைமையிலான அமமுக மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்து, சுமார் 22.25 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தினகரனை தங்களது அறிக்கையில் விமர்சித்துள்ளவர்கள், “வாக்காளர்கள், அதிமுகவுக்கு துரோகம் செய்தோரை புறந்தள்ளி உண்மையான மக்கள் இயக்கம் அதிமுக தான் என்பதையும், மக்கள் மனதில் நிலைபெற்றிருப்பது "இரட்டை இலை" சின்னம் தான் என்பதையும் தங்கள் வாக்குகள் மூலம் உறுதி செய்திருக்கின்றார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி வாக்காளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், நேரடி சந்திப்புகள் வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட வேண்டும் என்றும் அறிக்கையில் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.