நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசும் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மறந்தும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை.   இரண்டு அணிகளாக இருந்து மீண்டும் ஒன்று சேர்ந்த பிறகு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். வெளிப்புறத்தில் பார்க்க இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும், கட்சியில் உண்மையான அதிகாரம் யாருக்கு என்பதை காட்ட இருவருமே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் முதலமைச்சராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமிஅவ்வப்போது வெற்றி பெற்று வந்தார். கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி எடப்பாடி பழனிசாமி கைகளே ஓங்கியிருக்கிறது. இதனால் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவருமே எடப்பாடி பழனிசாமியையே சுற்றி சுற்றி வருகின்றனர். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் கூட ஓ.பி.எஸ்.சால் நிர்வாகிகள் நியமனத்தில் கூட சுதந்திரமாக செயல்பட முடியாத ஒரு நிலை உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே யாருக்கு கட்சியில் அதிகாரம் என்று பனிப்போர் நீடித்து வருவதாகவே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர்கள் அனைவரும் பேசத் தொடங்குவதற்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிவிட்டே பேச ஆரம்பித்தனர். மேலும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், உதயகுமார் போன்றோர் முதலமைச்சர் எடப்பாடிக்கு பல்வேறு பட்டங்களை எல்லாம் கொடுத்தனர்.

 ஆனால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும் போது மறந்தும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை தெரிவிக்கவில்லை. கட்டாயமாக கூற வேண்டிய இடத்தில் வெறும் மாண்புமிகு முதலமைச்சர் என்று மட்டும் முடித்துக் கொண்டார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பலரை பாராட்டி பேசினார், ஆனால் துணை முதலமைச்சர் பெயரை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை.  இதனால் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையிலான மனஸ்தாபம் நீரு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருப்பதாகவே கருதப்படுகிறது.