எடப்பாடி பழனிசாமியன் ஆதரவாளர்களின் ஒற்றை தலைமை என்ற கோஷத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தனது திட்டத்தில் இருந்து இபிஎஸ் பின் வாங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவும் அதிமுகவும்

 ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல வித பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் மேற்கொண்டு சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக புகார் தெரிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டார். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து சசிகலா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால இபிஎஸ் முதலமைச்சராக்கப்பட்டார். மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணியுடன் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தை அடிப்படையில் அதிமுகவில் இணைந்தது. ஆனால் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஆட்சியும் கட்சியும் இயங்கி வந்தது. இதனையடுத்து இரட்டை தலைமையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவிற்கு இறங்கு முகமாகவே இருந்தது.

ஒற்றை தலைமை -ஓபிஎஸ் அதிர்ச்சி

இரட்டை தலைமையால் உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லையென்றும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒற்றை தலைமை தான் அவசியம் என அதிமுக நிர்வாகிகள் கூறி தொடங்கினர். இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதனையடுத்து ஒற்றை தலைமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதும் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக களத்தில் இறங்கிய தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர். ஒற்றை தலைமை ஓபிஎஸ் எனவும் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுக்களை வெடித்தும் கொண்டாடினர். 

பின் வாங்குவாரா இபிஎஸ்

 ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தற்போது உள்ள நிலை குறித்து விவரித்தார். விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.ஓபிஎஸ் எப்போதும் போல் அமைதியாக சென்று விடுவார் அவருக்கு அவைத்தலைவர் பதவி கொடுத்து ஓரங்கட்டப்படலாம் என நினைத்த இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் இரண்டு தரப்பிலும் ஆலோசனை நடத்தினர். தற்போது உள்ள சூழ்நிலையில் இரட்டை தலைமை தொடர்பான பேச்சு பிரச்சனையை பெரிது படுத்தும் என கூறப்பட்டது. எனவே இந்த பிரச்சனையில் இருந்து பின்வாங்கலாமா? இல்லது திட்டமிட்டபடி பொதுச்செயலாளர் பதவியை அடைய அடுத்த கட்ட நகர்வுகளை தொடுங்கலாமா என இபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.