கொலை வழக்கு குற்றச்சாட்டுக்குள்ளான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,பாஜகவிடம் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் ஆனால் முதலமைச்சர் மு.ஸ்டாலினிடம் இருந்து தப்பிக்க முடியாது என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எல்லோரும் என்னை மாட்டிவிடுகின்றனர்

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மற்றும் மாநகராட்சி பட்ஜெட் குறித்த விளக்க பொது கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினராக அப்துல்லா தேர்வானதற்கு தான் தான் காரணம் என கூறினார். ஆனால் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென கூறினார். இப்படித்தான் எல்லோரும் தன்னை மாட்டவிடுவதாக உதயநிதி கூறினார். தொடர்ந்து பேசியவர், இந்தியாவில் பொது மொழியாக ஆங்கிலம் இருக்கக்கூடாது இந்தி தான் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்தி தெரியாது போடா என திமுகவினர் பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். எந்த மொழிக்கும் திமுக எதிரி கிடையாது என தெரிவித்தவர், ஆனால் இந்தி திணிப்பை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். இதற்காக திமுக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.

நீட் தேர்வு விரைவில் ரத்து

மகளிருக்கான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தவர், அரசு பேருந்துக்கு ஓனராக மகளிர் இருப்பதாகவும் தெரிவித்தார்.பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பாஜக உயர்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி, அதிமுகவினர் இந்த விலை உயர்வுக்கு முட்டுக்கொடுத்து வருவதாகவும் விமர்சித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று 10 மாதங்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லையென தெரிவித்தவர், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மத்திய பாஜக கூறியதை கேட்டு நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தியதாக தெரிவித்தார். நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாக கூறியவர், இதற்காக முதலமைச்சர் டெல்லி சென்ற போது பிரதமர் மோடியை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பாக அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார். எனவே நீட் தேர்வு ரத்து என்கிற நல்ல முடிவு வரும் என கூறினார்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் தப்பிக்க முடியாது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு மட்டும் தான் இருந்ததாகவும், ஆனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மீது கொலை, கொள்ளை வழக்கு உள்ளதாக கூறினார். இருவரும் பாஜகவிடம் இருந்து தப்பிக்கலாம் ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து தப்பிக்க முடியாது என கூறினார். ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம் என்ற திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.