ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே எழுந்துள்ள அதிகாரப் போட்டியால் அதிமுகவில் செயற்குழு உறுப்பினர்கள் காட்டில் அடை மழை வெளுத்து வாங்க துவங்கியுள்ளது.

பொதுச் செயலாளர் பதவி மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் என இரண்டு விஷயங்களை மையமாக வைத்தே அதிமுகவில் தற்போது சலசலப்பு எழுந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களாகவே காய் நகர்த்தி வந்தார். ஆனால் இதனை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ஓபிஎஸ். இதனால் அவரை அமைச்சர்கள் சமாதானம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க தயார், ஆனால் ஒரு கண்டிசன் என்று இறங்கி வந்தார் ஓபிஎஸ்.

அதாவது முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும் என்றால் தன்னை பொதுச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் புதுக்குண்டை போட்டார். இதனால் அதிமுகவில் சலசலப்பு அதிகமானது. வெறும் அமைச்சர்கள், மேலிட நிர்வாகிகள் மட்டுமே முடிவெடுக்கிற விஷயம் இதுவல்ல, செயற்குழு, பொதுக்குழு கூடி இது பற்றி பேசலாம் என்று அதிமுக முடிவெடுத்தது. இதனை அடுத்து வரும் திங்களன்று அதிமுக செயற்குழு சென்னையில் கூட உள்ளது. அப்போது முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

ஆனால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அந்த முடிவை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். எனவே முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெறும் முனைப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருகிறார். தினமும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களிடமும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசி வருகிறது. அவர்களின் தேவை என்ன என்ன என்று அறிந்து தற்போது முதலே அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இதே போல் ஓபிஎஸ் தரப்பும் பொதுச் செயலாளர் பதவியை குறி வைத்து செயற்குழு உறுப்பினர்களிடம் பேசி வருவதாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் தரப்பும் செயற்குழு உறுப்பினர்கள் ஒருவர் விடாமல் அனைவரிடத்திலும் அவர்களின் தேவையை அறிந்து பேசி வருவதாக சொல்கிறார்கள். அப்போது உறுதியாக ஆதரவு தெரிவிக்காத செயற்குழு உறுப்பினர்கள் மனம் மகிழும் வகையில் சில வாக்குறுதிகளை ஓபிஎஸ் தரப்பு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களை அணுகி வருவதால் அவர்களின் காட்டில் அடை மொழி தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

செயற்குழுவை தொடர்ந்து பொதுக்குழுவிலும் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது. எனவே பொதுக்குழு உறுப்பினர்களையும் கூட தற்போது முதலே வளைக்கும் முயற்சியில் இரண்டு தரப்பும் மல்லு கட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் திங்களன்று நடைபெறும் அதிமுக செயற்குழுவில் இந்தியா பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி போல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.