அரசு ஊழியர்களின் 19,000 தபால் ஓட்டுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பேரம் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்நிலையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரம், தேர்தல் அறிவிக்கும் முன் மத்திய, மாநில அரசுகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்கான மறைமுக முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசு விவசாயிகளுக்கு சலுகை அளிப்பதாக கூறி, 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோல் தமிழக அரசு வறுகைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 

இதனிடையே அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியும் அதற்கு அரசு செவிசாய்க்காமல் இருந்ததால் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பெற்றத் தருகிறோம் என கூறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒரு சிலர் பேச்சுவார்த்தை நடத்துவதும் அதற்கு துணை முதல்வர் இது தொடர்பாக முதல்வரிடம் ஒரு கடிதம் கொடுக்கும்படி கூறுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அந்த வீடியோவில் ஒரு சிலர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுகிறார்கள். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் உள்ளார். அப்போது அவர்கள், 19,000 அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 10 லட்சம் ஓட்டும் நமக்கு கிடைத்துவிடும் என்கிறார். ஆனால் நீங்கள் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் ரூ.4,500 கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கிறார்கள். இந்த வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.