ஜெயலலிதாவை அவதூறாக விமர்சிப்பதா.?அமைச்சர் பதவிக்கே இழுக்கு! கேகேஎஸ்எஸ்ஆருக்கு நாவடக்கம் தேவை.!- ஓபிஎஸ் ஆவேசம்
அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் உடையவர்கள் தவறியும்கூட தன் வாயால் தகாத சொற்களைப் பேச மாட்டார்கள். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக ஒழுக்கமற்ற முறையில் நாகூசும் வார்த்தைகளை திரு. இராமச்சந்திரன் அவர்கள் பேசியிருப்பது வெட்கக்கேடான செயல் என ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவை விமர்சித்த கேகேஎஸ்எஸ்ஆர்
ஜெயலலிதா தொடர்பாக அவதூறாக பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற அரும்பெரும் தலைவரை, அநாகரிகமற்ற, அருவருக்கத்தக்க, பண்பாடற்ற நாகூசும் வார்த்தைகளால் பேசியதோடு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை அறிமுகம் செய்து வைத்ததில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்று அண்மையில், சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. வருவாய்த் துறை அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாவது பெரிய கட்சி அதிமுக
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் நலைவி அம்மா அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே திரைத்துறையில் அறிமுகமாகி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிந்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர், 1965 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது, தான் வைத்திருந்த தங்க நகைகளை அன்றைய பாரதப் பிரதமர் திரு. வால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் வழங்கிய பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். புரட்சித் தலைவர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்து, கட்டுக்கோப்புடன் வைத்திருந்து, நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இது மட்டுமல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு.
பழசை மறந்துடாதீங்க.. நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர்.. நாவடக்கம் தேவை.. எச்சரிக்கும் ஜெயக்குமார்..!
கேகேஎஸ்எஸ்ஆர் செயல் கேலிக்கூத்தானது
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் அறிமுகப்பபடுத்தப்பட்டு, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மாவை அறிமுகப்படுத்தியதில் தளக்கும் பங்கு உண்டு என்று வருவாய்த் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பதவிக்காக கட்சி மாறி, அமைச்சராகியுள்ள திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தான் சார்ந்துள்ள கட்சியின் தலைமையை குளிர்விக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை துதிபாடலாம். அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளரான மாண்புமிகு அம்மா அவர்களை சிறுமைப்படுத்தி பேசுவது என்பது ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற செயல். கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் பொறுப்பு-நாவடக்கம் தேவை
ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் கூட தன் வாயால் தகாத சொற்களைப் பேச மாட்டார்கள். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக ஒழுக்கமற்ற முறையில் நாகூசும் வார்த்தைகளை திரு. இராமச்சந்திரன் அவர்கள் பேசியிருப்பது வெட்கக்கேடான செயல். தன்னுடைய தரம் தாழ்ந்த பேச்சின்மூலம் அமைச்சர் பதவிக்கே இழுக்கை தேடிக் கொடுத்து இருக்கிறார் திரு. இராமச்சந்திரன் அவர்கள். இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் செம்மை புரிவது ஒழுக்கம் என்பதை மனதில் கொண்டு நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிப்பதையும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்