ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓட்டக்காரத்தேவர் – பழனியம்மாள் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தார். 

ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.இவரது  தந்தை ஓட்டக்காரத்தேவருக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது தான் தொழில்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்ப குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை பெற்றோர் அவருக்கு பேச்சிமுத்து' அவருக்கு என பெயரிட்டார். அதன் பின்பு  பெயர் பன்னீர் செல்வம் என மாற்றப்பட்டது. தனது பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் முடித்தார்.

கல்லூரி படிப்பை தேனி அடுத்துள்ள உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். பன்னீர்செல்வத்தின் மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர்.

முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கிய அவரது குடும்பம், அடுத்து லாரிகளுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழிலிலும் கால் பதித்தது. 

மேலும் பால் பண்ணை நடத்திய பன்னீர் செல்வம், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார். இந்தக்கடையே இவருக்கு வாழ்வாதாரமாக இருந்தது. 

அதிமுகவில் இருந்தபடி, அவ்வப்போது கட்சிக்கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். 

தனது 31வது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், 1982ம் ஆண்டில் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ஆனார். 1989ம் ஆண்டில் நகர இணைச் செயலாளராகவும் 1993ம் ஆண்டில் நகர செயலாளராகவும் ஆனார்.

அதனை தொடர்ந்து 1996 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி தலைவர் ஆனார். 2000ம் ஆண்டில் மாவட்ட செயலாளராக மாறினார். 

2002 ம் ஆண்டு கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், பிறகு கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். நான்கு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாகவும் 3 முறையாக முதல்வராக இருந்து வருகிறார்.

முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.அந்த காலகட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளராக இருந்த போது பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று 2001 ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார்.

1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். தேனியில் தேர்தல் அலுவலகம் வைத்திருந்த டிடிவி தினகரன், எம்.பியான பிறகு ஆண்டுக்கு ஒரு தொகுதியில் குடியிருப்பது என முடிவெடுத்தார்.

இதன்படி, 2000ம் ஆண்டில் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜாவுக்கு சொந்தமான வீட்டிற்கு குடியேறினார். இதுவே ஓபிஎஸ்சின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்தது.அவரின் செல்வாக்கு அதிகரித்தது 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

முதன் முறையிலேயே வருவாய்த்துறை அமைச்சராக 2001ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை பதவி வகித்தார். 2006ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 வது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், 2016ம் ஆண்டு தேர்தலில் நான்காவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2001ம் ஆண்டில் டான்சி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. அப்போது, முதல் முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இதைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டில் பெங்களூர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. அப்போது, இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இப்போது, முதல்வர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பை மூன்றாவது முறையாக ஓ.பி.எஸ். ஏற்றுள்ளார். இன்று இவர் 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.