தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இதயம் செயலிழந்தது மரணம் அடைந்ததையடுத்து, அடுத்த முதல்வராகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையொட்டி, நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டதும், அனைத்து எம்.எல்.ஏ.களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று காலை வர கட்சிதலைமை உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பெயரில் வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்களும் சென்னை வந்து சேர்ந்தனர்.

அதன்பின், அப்பல்லோ மருத்துவமனையின் கீழ்தளத்தில் நேற்று காலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. 

அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடக்க இருந்தது. இதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். 

இந்த கூட்டத்தின் முடிவில் கட்சியில் உள்ள 135 எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவை தலைவராக நிதிஅமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை ஒரு மனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் 3-வது முறையாகப் பொறுப்பேற்க இருக்கிறார்.