எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சீன் போட சென்றார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்த நிலையில், மு.க. ஸ்டாலினை போல நீலகிரிக்கு போஸ் கொடுக்க வரவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.


 நீலகிரியில் வரலாறு காணாத மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவலாஞ்சி பகுதி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட முதல் ஆளாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீலகிரி சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். திமுக சார்பில் நிவாரணப் பணிகளுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.


நீலகிரியில் மு.க. ஸ்டாலின் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட சென்றது குறித்து  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சீன் போட அங்கே சென்றுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனத்துக்கு திமுக - அதிமுக சார்பில் லாவணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஆய்வு செய்வதற்காக நீலகிரி சென்றார். வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்தார். “ நான் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன். ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க இங்கே வரவில்லை. துரித நடவடிக்கை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் பேசலாம். ஆனால், பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது.” என்று மு.க. ஸ்டாலினை விமர்சித்தார்.