காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் முடிய இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. அதுவரை காத்திருப்போம்; அதன்பின் அனைத்து கட்சியினரும் ஆலோசித்து முடிவெடுப்போம் என ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை மேலாண்மை செய்ய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வாக்கியம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்பதை காரணம் காட்டி மத்திய அரசு தட்டி கழித்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள், நாடாளுமன்றத்தை கடந்த 10 நாட்களாக முடக்கியுள்ளனர். தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய பாஜக அரசிற்கு எதிராக ஆந்திராவின் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகின்றனர். அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

இன்று சட்டசபையில் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவதோடு, நாடாளுமன்றத்தை முடக்கியும் உள்ளனர். தொடர்ந்து அதிமுக எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் இணைத்து பார்க்க வேண்டாம். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, வரும் 29ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதற்குள் மத்திய அரசு, வாரியத்தை அமைத்துவிடும் என நம்புவோம். எனவே வரும் 29ம் தேதி வரை காத்திருப்போம். அதற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்போம் என ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.