கோவையில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசியது அண்மையில் சர்ச்சையானது. இந்நிலையில் புதுச்சேரி-விழுப்புரம் புறவழிச்சாலை வில்லியனூர் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர், காவி துண்டை அணிவித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள நிலையில்காவி துண்டை எம்ஜிஆருக்கு அணிவித்திருப்பது சர்ச்சையானது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். 
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவருடைய பதிவில், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பதிவை  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் ட்வீட்டை ரீவீட் செய்து உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், “காவி அவமதிப்புக்கான அடையாளம் என்கிறார் அண்ணன் @OfficeOfOPS. எவ்வளவு தைரியம் பாருங்களேன். ஆனால் இதெல்லாம் தன் ஓனருக்கு தெரிந்துதான் பேசுகிறாரா என்பதே என் டவுட். அடுத்து வெளிமாநில சிலைகளுக்கு காவி போட்டால்தான் அவமதிப்பா? அவை தமிழகத்துக்குள் நடந்தால் உங்கள் அவமதிப்பு அப்ளை ஆகாதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.