அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் சீனியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்த அக்கட்சியின் செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற ஆலோசனையில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவு  எடுக்கப்படவில்லை. இதனையடுத்து அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

பின்னர், முதல்வர் பங்குபெறும் நிகழ்ச்சிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். ஆனால், நேற்று முன்தினம் காந்தி பிறந்தநாள் நிகழ்வில் மட்டும் கலந்துகொண்டார். ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. இதனைத் தொடர்ந்து சொந்த ஊரான பெரியகுளத்துக்குப் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து வரும் தகவல்படி தேனியில் தங்கியிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளான வைத்தியலிங்கம், நந்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.