ops and eps wishing modi for 3rd year anniversary

மத்திய அரசின் மூன்று ஆண்டு ஆட்சி நிறைவுற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு , இன்னாள் முதலமைச்சர் இபிஎஸ்ம், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம் போட்டிபோட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசையும், அதிமுகவின் இரு அணிகளையும் மத்தியில் ஆளும் பாஜக தான் இயக்கி வருகிறது என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அடிக்கடி பிரதமரை சந்தித்து வருவதும் இதற்கு உதாரணமாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாண்டு நிறைவடைந்துள்ளதையொட்டி , மத்திய அரசின் மூன்றாண்டு ஆட்சியைப் பாராட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் மோடியின் வேகமான செயல் திறனால் இந்தியா வேகமாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு பிதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் மிகவும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று ஓபிஎஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவின் வளர்ச்சிக்கான சாதனை திட்டங்களைக் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்னாள், முன்னாள் முதலமைச்சர்கள் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு பிரதமரை சந்திப்பதும், அவருக்கு வாழ்த்து சொல்வதும், பாஜகவால் அவர்கள் இருவரும் இயக்கப்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.