அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கித் தரக் கோரியும்  தலைமை தேர்தல் ஆணையரை இபிஎஸ்ம் ஓபிஎஸ்ம் இன்று  டெல்லியில் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின்பு முதல் முறையாக தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.  

இதில் பொதுக் குழுவை கூட்டுவது, தினகரனால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்குவது  என்பன  உள்பட அதிமுக கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை ஆகியோர்  சென்றுள்ளனர்.

அப்போது ஏற்கனவே தங்கள் அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஓபிஎஸ் திரும்பப் பெறுவார் என தெரிகிறது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்,  குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி செல்ல திட்டமிட்டு உள்ளனர்.