தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி  2338 இடங்களையும், அதிமுக கூட்டணி 2185 இடங்களையும் பிடித்தது. இதே போல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக  கூட்டணி 272 இடங்களிலும், அதிமுக கூட்டணி  241  இடங்களையும் பெற்றது. இதில் திமுகவே முந்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை  வெளியிட்டுள்ளனர்.

அதில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காள பெருமக்களுக்கு நன்றி. எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக, தொண்டர்களின் உழைப்பாலும், அரசு நிகழ்த்தி வரும் பல்வேறு சாதனைகளாலும், தமிழ்நாட்டு மக்களின் அன்பையும், ஆதரவையும் மீண்டும் பெற்று வருகிறது என்பதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

அதிமுகவின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், தோழமை கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனிவரும் நாட்களில் இன்னும் சிறப்பாக பணியாற்றி, தமிழகத்தின் அனைத்து தேர்தல்களிலும் முழுமையான வெற்றிகளை பெற உறுதி ஏற்போம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.