தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்
துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் எடப்பாடி முதலமைச்சராக இருந்தார். மக்களை பாதுகாக்க வேண்டிய அவர், அதிலிருந்து தவறியதால் எடப்பாடி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு
தமிழக சட்ட பேரவை கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விவாதத்தை முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் என்பது மக்கள் மீதான வன்முறையை அரசு தெரிந்தே கட்டவிழ்த்து விட்டிருப்பதாகவும், மக்களை குறிவைத்து காக்கைகளை சுடுவது போல சுட்டு தள்ளியதாகவும், மனித படுகொலையை நடத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதய முதலமைச்சர் எடப்பாடி செய்தியாளர்கள் சந்திப்பில், "ஓ அப்படியா" துப்பாக்கி சூடா நடந்திருக்கிறதா, டிவி பார்த்து தான், அதனை தெரிந்து கொண்டதாக கூறினார். இது முதலமைச்சர் பதவிக்கு அவமானகரமானது என்றும், மக்கள் மீதான வன்முறையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தென் மண்டல ஐஜி வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் மீது, தற்போது அவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அந்த பதவியிலிருந்து அவர்களை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது குற்றவழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இபிஎஸ் மீது குற்றவியல் வழக்கு
மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் , அதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் எடப்பாடி முதலமைச்சராக இருந்தார். மக்களை பாதுகாக்க வேண்டிய அவர், அதிலிருந்து தவறியதால் எடப்பாடி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இபிஎஸ் செயல் வெட்கக்கேடானது
சி பி ஐ சட்டமன்ற உறுப்பினர் தளி ராமசந்திரன் பேசுகையில், வேண்டுமென்றே 13 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அப்போதய முதல்வர் தொலைக்காட்சியை பார்த்து தான் இந்த சம்பவத்தை தெரிந்து கொண்டேன் என்று சொன்னது வெட்கக் கேடானது. 17 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் தூத்துக்குடி மாவட்ட அட்சியர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமகா மூடவேண்டும் என்றார்.
மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் பேசுகையில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதும் சரிவர கையாளாத ஆட்சியாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு முதல்வர் உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். சிபிஎம் சின்னதுரை பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதே அதற்கு சிபிஐ விசாரணை தேவை என்று. அப்போதய மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சட்டப்படி நடக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். ஆகவே அவர்களை குற்றவாளிகளாக அறிமுகம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டவாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
துரோகம்- எடப்பாடி பழனிசாமி
பாமக சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், மறைக்க முடியாத கரும்புள்ளி. அதற்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் படி அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடி சம்பவம் வன்மத்தை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல். துரோகம்,துரோகம் என்றால் அது அப்போதய முதலமைச்சர் எடப்பாடி என்று தான் தெரியவரும். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படியுங்கள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! திசை திருப்பவே உண்ணாவிரதம்.!அப்பாவி போல நடித்தவர் தான் இபிஎஸ்.!கே. பாலகிருஷ்ணன்