சாலை மறியல் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும், போராட்டத்துக்கு ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகம் முழுவதும் சாலை மறியலில ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியல் காரணமாக அண்ணாசாலை முடக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதன் பின்னர், பேரணியாக சென்ற அவர்கள், மெரினா உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியல் நடத்தினர். அப்போது மறியலில் ஈடபட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் பலர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். 

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின், மறியல் போராட்டம் வெற்றி பெற்றதாக கூறினார். இன்றைய ஆர்ப்பாட்டம்போல, தமிழகத்தில் இதுவரை நடைபெற்றதில்லை.

போராட்டம் வெற்றி பெற்றதற்கு காரணமான கட்சி தலைவர்கள், வணிகர்கள், பொக்குவரத்து தொழிலாளர்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள், மறியலுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும், அனைத்து கட்சி சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறினார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மறியல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் கைதாகியதாக தகவல் வந்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து கட்சி கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்றார்.

அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி உரிமை மீட்பு பயணம் ஏப்ரல் 7 ஆம் தேதி திருச்சி, முக்கொம்பில் தொடங்க உள்ளோம். இந்த நடை பயணம் கடலூரில் முடிவடையும்.

வேலை நிறுத்தம், மறியல் போராட்டங்களால் மக்களுக்கு அசௌகரியங்கள் இல்லை. காவிரி மேலாண் வாரியம் அமைக்க மத்திய அரசு மீண்டும் செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சோற்றுக்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களே இதில்
போராடி வருகின்றனர். மறியல் போராட்டம் அறவடிழயில் நடந்து வருவதாக கூறிய ஸ்டாலின், சில ஊடகங்கள் தவறான வதந்திகளை பரப்பி வருவதாக கூறினார்.

ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்போவதாக கமல் அறிவிப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், கமல் அவருடைய பாணியில் நடத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் எங்கள் வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

அதிமுக ஆட்சியின் அவலங்களை ஆளுநர் பன்வாரிலால் என்னிடம் எடுத்துரைத்துள்ளார். அதிமுக ஆட்சியின் அவலங்கள் பற்றி ஆளுநருக்கு நன்றாக தெரியும். அதிமுக ஆட்சிடியல் நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் ஆளுநர் தனி டிராக்கில் ஆய்வு செய்கிறார் என்று ஸ்டாலின் கூறினார்.