நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் நூல் விலை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” விடியா அரசு, தனது தேர்தல் அறிக்கையில், நெசவாளர்களுக்கு தங்குதடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து, நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும் என்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடியா அரசு இவற்றை எப்போது நிறைவேற்றும் ? தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு சுமார் ரூ. 150 முதல் ரூ. 200 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால், இதுவரை நூல்விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த விடியா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலையை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, மத்திய அரசை, இந்த அரசு சுட்டிக்காட்டுகிறது.
மேலும் படிக்க: இலங்கை பிரதமருக்கு ஏற்பட்ட நிலை நாளை இந்தியாவிற்கும் ஏற்படலாம்...! பிரதமர் மோடியை எச்சரிக்கும் சீமான்
38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளோம் என்று கூறும் இந்த விடியா அரசும், அதன் கூட்டணிக் கட்சியினரும், நூல் விலையைக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்யவும், நாடாளுமன்றத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் ? மக்களுக்கு நன்மை செய்வதாக வாய் நீளம் காட்டும் இந்த விடியா அரசின் அவலங்களையும், அலங்கோலங்களையும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள். சிலரை சில காலம் ஏமாற்றலாம்... பலரை பல காலம் ஏமாற்றலாம்... . எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது...
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நம் நாட்டுக்கு ஏற்றுமதி மூலம் பல நூறு கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டுவதிலும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முன்னணியில் இருந்தது. ஆனால் இப்போது, நூல் விலை உயர்வினால் திருப்பூர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவாளர்களும் வேலைவாய்ப்பின்றி ஸ்தம்பித்துப் போயுள்ளனர். மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பஞ்சு இறக்குமதியில் உள்ள சிரமங்கள், இதனால் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத நூல் விலை உயர்வு, நெசவுத் தொழிலை நலிவடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட நெசவாளர்களும், பின்னலாடைத் தொழிலாளர்களும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
எனவே, நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்; நூல் விலை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த விடியா அரசை வலியுறுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிர்ச்சி..! லஞ்சம் கேட்டு வட்டாட்சியர் தொல்லை.. வாலிபர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை..
