oppose to ramnath Govinth

பா.ஜனதா தலைமையிலான தேசியஜனநாயக்ககூட்டணி கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்த ராம்நாத் கோவிந்துக்கு , காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், பா.ஜனதாவின் கூட்டணியில் உள்ள சிவசேனா கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை பா.ஜனதா தேர்வு செய்தது தன்னிச்சையான முடிவு. இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆலோசித்தபின் ஒருமித்த முடிவு எடுப்போம்.

வரும் 22ந்தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடி ஆலோசித்து இறுதி முடிவு எடுப்போம். வேட்பாளரை அறிவிக்கும் முன்பே பா.ஜனதா கட்சி கருத்து ஒற்றுமையை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், முடிவை அறிவித்த பின்பு எங்களிடம் தகவல் தருகிறார்கள். ஆதலால், கருத்து ஒற்றுமை ஏற்பட வழியில்லை. அதை ஆளும் கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஆனால், விரும்பினால், அனைவரும் ஏற்கும் வகையில் ஒருமித்த முடிவு எடுக்கலாம்’’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ்....

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அனைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வரும் 22ந் தேதி மாலை 4மணிக்கு கூடி முடிவு செய்வோம் ’’ என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி

பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், “ ஜனாதிபதி தேர்தலில் தலித் வேட்பாளருக்கு எதிராக எங்கள் கட்சி நிலைப்பாடு எடுக்காது. எதிர்க்கட்சிகள் சார்பில் தலித் வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், நாங்கள் சாதகமான முடிவைத்தான் எடுப்போம் ’’ என்றார்.

சிவசேனா கட்சி

சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், “ பா.ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூடி, ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ததும், கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அப்போது, வேட்பாளர் கோவிந்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று அமித்ஷா கோரிக்கை விடுத்தார். எங்கள் கட்சி உறுப்பினர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தி, முடிவுக்கு வருகிறோம். அதன்பின், ஒரு சில நாட்களில் எங்கள் முடிவை அறிவிப்போம்.

நாங்கள் மோகன் பகவத், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகிய இருவரை நாங்கள் பரிந்துரைத்தோம். ஆனால், இருவரையும் தவிர்த்துவிட்டு யாரையோ தேர்வு செய்து, எங்களிடம் தெரிவித்து விரைவாக எங்கள் முடிவை பா.ஜனதா கேட்கிறது’’ எனத் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம்

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் பாட்னாவில் கூறுகையில் “ பீகார் முதல்வராக என்னைப் பொருத்தவரை, ஆளுநர் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜனதா தேர்வு செய்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது. பா.ஜனதா வேட்பாளரான கோவிந்தை நாங்கள் ஆதரிப்பது குறித்து, எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பின்பு தான் முடிவை அறிவிப்போம். இப்போது ஏதும் கூற முடியாது’’ எனத் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், “ நாட்டில் மிகப்பெரிய தலித் சமூகத் தலைவர்கள் இருக்கிறார்கள். பா.ஜனதாவின் தலித்பிரிவு தலைவரான கோவிந்த் என்பதால், அவரை நியமித்து இருக்கிறார்கள். ஜனாதிபதி என்பது முக்கியமான பொறுப்பான பதவி.பிரணாப் முகர்ஜி போல், அல்லது சுஷ்மா சுவராஜை அல்லது அத்வானியைக்கூட நிறுத்தி இருக்கலாம். யாரோ அடையாளம் தெரியாத ஒரு நபரை ஆதரிப்பதற்கு பதிலாக தெரிந்தவரை ஆதரிக்கலாம். நாட்டுக்கு நலன்தரும் நபரை நிறுத்த வேண்டும். வரும் 22-ந்தேதி எதிர்க்கட்சிகள் கூடி முடிவு செய்தபின், அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்போம்.

இப்போது நான் கருத்து ஏதும் கூற இயலாது. கோவிந்த் குறித்து சில தலைவர்களிடம் பேசினேன். அவர்கள் வியப்படைந்தார்கள். நாட்டில் எத்தனையோ மிகப்பெரிய தலித் தலைவர்கல் இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.