முரட்டு மெஜாரிட்டியுடன் இந்த தேசத்தை கைப்பற்றியது பி.ஜே.பி. மோடியிடம் மிகப்பெரிய மாயாஜாலத்தை எதிர்பார்த்தனர் இந்தியர்கள். அவரும் கைகளை தேய்த்து, கண்களை மூடி சில தயாரிப்புகளில் இறங்கினார். கண் திறந்த மோடி ’இதோ இந்த தேசத்தின் தலையெழுத்தை மாற்றுகிறேன் பார். சுத்தம் தான் சோறு போடும். அதனால் அழுக்கான இந்தியாவை சுத்தம் செய்து நம் மாற்றத்தை துவக்கலாம்!’ எனும் பிரகடனத்துடன் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தை அறிவித்தார். 

இதுவரையில் இதற்காக ஒதுக்கப்பட்ட கோடிகளை கணக்கிட்டால் இந்தியாவில் ஒரு வளர்ந்த நகரத்தை உருவாக்கிவிடலாம். மிகப்பெரிய அளவில் பிரதானப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் தேசிய அளவிலான செலிபிரெட்டிகள் தூதுவர்களாக பயன்படுத்தப்பட்டனர். தேசத்தின் சந்து பொந்துகளில் பி.ஜே.பி. வி.ஐ.பி.க்கள் துடைப்பத்தை தூக்கிக் கொண்டு நின்றனர். ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட இடங்களை மீண்டும் சுத்தம் செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதில் மோடி முதல் இடத்தில் நின்றார். 

இன்று பி.ஜே.பி.யை கஞ்சி காய்ச்சி ஊத்தும் கமல்ஹாசன் கூட இந்த திட்டத்தின் தூதுவராக  சில நாட்கள் பயன்படுத்தப்பட்டார். என் தேசம்! என் சுத்தம்! என்று பஞ்ச் டயலாக்குகள் பறந்தன. ’எல்லா வீதிகளும் இனி சுத்தத்தில் மிளிரும்.’ என்று இந்தியன் எக்கச்சக்கமாய் கனவு கண்டான். தமிழகத்தில் கூட பல ஊர்களில், வழக்கமாய் குப்பை கொட்டும் இடங்கள் கூட்டி பெருக்கப்பட்டு கோலமிடப்பட்டன.

மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. ஆனால் போட்டோ எடுக்கப்பட்ட பின், மீண்டும் அந்த இடங்கள் குப்பை மேடுகளாகின. மாநகராட்சிகளிலோ, நகராட்சிகளிலோ, பஞ்சாயத்துக்களிலோ சிறப்பான சுகாதாரத்துக்கான எந்த தொடர் முன்னெடுப்பும் ஏற்படுத்தப்படவில்லை. 

இப்படியே நான்காண்டுகள் நகர்ந்துவிட்டன. ஏமாந்த இந்தியன்  எக்கச்சக்க கோபத்தில் இருக்கிறான். சிம்பிளாய் சொல்வதென்றால், கலீஜான தேசம் இன்னும் கலீஜாகவே இருக்கிறது! ஆனால் இதற்காக காலியாக்கப்பட்ட கஜானாவின் அளவோ மிகப்பெரிது. 

ஐந்தாவது ஆண்டை ஓட்ட துவங்கியிருக்கும் பி.ஜே.பி. அரசோ மீண்டும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தூக்கிப் பிடிக்க துவங்கியிருக்கிறது. ‘தூய்மையே சேவை’ எனும் ப்ராஜெக்டை துவக்கியிருக்கும் மோடி, பழையபடி துடைப்பத்தை தூக்கிக் கொண்டு புல்வெளியை கூட்டியபடி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த ப்ராஜெக்டில் ஒதுக்கப்பட்டதில் எத்தனை கோடிகளை நாம் பாக்கெட்டில் ஒதுக்கலாம்! என்று பல மாநிலங்களில் அதிகார வர்க்கம் கால்குலேட் செய்து கொண்டிருக்கிறது. 

ஆக, எந்த மாற்றமும் இல்லை, எந்த முன்னேற்றமும் இல்லை. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை குப்பைகளுக்குள்தான் உழன்று கொண்டிருக்கிறது. 

தூய்மை இந்தியா திட்டம்  முழு தோல்வி அடைந்தது போலவே, முன்னாள் முதல்வர் உமாபாரதியின் கீழ் இயங்கும் கங்கை தூய்மைப்பணி துறையும் முழு தோல்வியை கண்டுள்ளது. ஆக ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்த இந்த ப்ராஜெக்டுகள் மோடியின் தோல்வியை காட்டுவதாகவே கூறுகின்றன எதிர்க்கட்சிகள். 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தின் பர்ஸ்ட் கியரை போட்டிருப்பவர்கள், ‘மக்களை தேடி வீடு வீடாக செல்லுங்கள். திண்ணைகளில் உட்கார்ந்து மோடியின் ஒட்டுமொத்த தோல்வியை சொல்லுங்கள்.’ என்று உசுப்பேற்றி வருகின்றனர் தங்கள் களப்பணியாளர்களை.