தேனியில் குச்சனூர் என்ற இடத்தில் சனிஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் காசி அன்னபூர்ணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு அதிக நன்கொடைகள் அளித்த பட்டியல் கோயில் நிர்வாகம் சார்பில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் மூன்று முக்கியமான பெயர்கள் ஹைலைட் டாக இடம் பெற்றுள்ளன,

அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஓ.பி.ஜெயபிரதீப் குமார் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். வரும் 23 ஆம் தேதி தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன…

இந்நிலையில் தேர்தல் முடிவே அறிவிக்கப்படாத நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. என்று குறிப்பிட்டு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரை காசி அன்னபூர்ணி ஆலய கல்வெட்டில் பொறித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதில் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத் குமாரை  குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. மேலும் உடனடியாக அந்தப் பெயரை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.