OOty MGR centenary function..labour died

கோவையைப் போன்று ஊட்டியிலும் நாளை கொண்டாடப்படவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி வைக்கப்பட்ட அ.தி.மு.க கொடி கூலித்தொழிலாளி ஒருவருக்கு உமனாக மாறியுள்ளது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அ.தி.மு.க அரசு, தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஊட்டி முழுவதும் பேனர்கள், அலங்கார வளைவுகள், அ.தி.மு.க கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. உதகையில் இது இரண்டாவது சீசன் நேரம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்த நேரத்தில், ஆளுங்கட்சியினர் கடும் போக்குவரத்துக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். இதில் தி.மு.க-வும் தங்களது பங்குக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வருகைக்காக போக்குவரத்து நெருக்கடி கொடுத்துள்ளனர். நடைமேடையைக்கூட விட்டுவைக்காமல், அதில் கொடிக் கம்பத்தை நட்டு, மக்களை நடக்க முடியாதபடி செய்துள்ளனர்

இதனிடையே, ஊட்டியை அடுத்த கோடப்பமந்து என்ற பகுதியில், கூலித் தொழிலாளியாக பணிபுரியும் பாபு தோட்டத்தில் உரம் வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மின்சாரக் கம்பியுடன் இணைத்து கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க கொடி, மின்சார ஒயருடன் உரசிக் கொண்டு இருந்துள்ளது. இதுதெரியாமல், கொடிக் கம்பத்தைப் பிடித்த பாபு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏற்கெனவே, கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நிதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தும் இது போன் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.